புதன், நவம்பர் 16

நன்மைக்கு பத்து ! தீமைக்கு ஒன்றே !

مَن جَاء بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَن جَاء بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَ

6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

நன்மைக்கு பத்து ! தீமைக்கு ஒன்றே !
அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அளவற்ற அருளாலன்,நிகரற்ற அன்புடையோன் என்பதற்கு மேற்காணும் திருமறை வசனம் மிகப் பெரிய சான்றாகும்.

சுவனத்திற்கள் நுழைந்து அதன் எண்ணிலடங்கா இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நன்மைகள் அதிகம் சேர்த்தாக வேண்டும் அதனால் மக்கள் நற்செயல்கள் புரியம் போது அதை ஒன்றுக்குப் பத்தாக்குகிறான் அளவற்ற அருளாலன் அல்லாஹ்.
மக்கள் நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும், தீய செயல்களிலிருந்து தங்களை தடுத்துக் கொள்வதற்காகவும் அவரவர்கள் பேசும் மொழியிலிருந்தே தூதர்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்பொழுது தேவையான விளக்கங்களை (வேதங்களை) அனுப்பிக்கொண்டிருந்தான்.  திருமறைக்குர்ஆனுடன் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றது.

முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் இறைத்தூதர்களின் வருகை முற்றுப்பெற்றது.

தூதர்கள், மற்றும் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றதன் பின்னரும் கூட இறுதி தூதர் முஹம்மது நபியின் சமுதாய மக்களில் திருமறைக் குர்ஆனையும், அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாற்றையும் படித்தறிந்தவர்களைக் கொண்டு மேற்காணும் நன்மை, தீமைகளைப் பிறித்தறிவிக்கும் அரும்பணியை மேற்கொள்ளும்படி இறைவன் ஏவினான். 3:104. நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

நன்மைக்குப் பத்து !
நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அரும் பணிகளை செய்யக்கூடிய நன்மக்களாலும், அதை ஏற்றுக் கொண்ட நன்மக்களாலும் அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் சில நேரம் தவறிழைத்து விடும் சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுவதுண்டு அதனால் பதியப்படும் பாவத்தால் அவர்களுடைய முந்தைய தியாகங்கள் அடிபட்டு விடாமல் இருப்பதற்காக அவர்களின் மீது கருணை கொண்ட அல்லாஹ் அதை ஒன்றாக மட்டுமேப் பதியச்செய்தான்.6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

தீமைக்கு ஒன்று !
நற்காரியங்களுக்கு பதியப்படும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவே தீயகாரியங்களுக்கும் பதியப்பட்டால் மக்களில் யாரும் அதை அநீதி என்று சொல்லப்போவதில்லை ஒன்றுக்கு ஒன்று கணக்கு சரிதான் என்றே கணிப்பர்;. உலகில் நற்காரியங்களை விட தீயகாரியங்களே மிகைத்திருப்பதால் தீமைக்கும் ஒன்றுக்கு பத்து மடங்குகளாக்கினால் தீமைகள், நன்மைகளை முந்தி விடும் அதன் மூலம் சுவனம் தடுக்கப்பட்டால் அது அவனுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அனைத்து மக்களின் மீதும் அளப்பரிய அன்புள்ளம் கொண்ட அல்லாஹ் தொலைநோக்கு சிந்தனையுடன் அதை ஒன்றாக மட்டுமேப பதிகிறான்.

அந்த ஒன்றையும் செயலிழக்கச் செய்வதற்கான அல்லாஹ்வின் சலுகை !
நிரந்தரமான சுவனத்தின் இன்பத்தை அனுபவிப்பதற்காக அந்த ஒரு பாவமும் அவருடன் நிரந்தரமாக தங்கி விடாமல் அதையும் செயலிழக்கச் செய்வதற்காக அதன் பின்னர் செய்யும் நன்மையைக் கொண்டு அதை அழித்து விடுவதாகவும் பலஹீன மனிதனின் மீது கருணை கொண்ட நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ் மேலும் ஒரு மகத்தான சலுகையை வழங்குகிறான். …நன்மைகள் தீமைகளை அழித்து விடும். இது படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை. 11:114.

அந்த ஒன்றையும் தடுத்துக் கொள்வதற்கான அழகிய உபதேசங்கள்.
நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! ஒரு தீங்கைத் தொடர்ந்து நல்லதை செய்துகொள்! அந்த நன்மை தீங்கை அழித்துவிடும், மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறியதாக அபூதர் மற்றும் முஆத் இப்னு ஜபல்(ரலி)ஆகியோர் அறிவிக்கின்றனர்.நூல்: திர்மிதி.

மேலே கூறப்பட்ட நபிகளாரின் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்ற முத்தான இரண்டு உபதேசங்களை யார் தன் வாழ்நாளில் முறையாக கடைப்பிடித்தொழுகுவார்களோ அவர்களால் அதிகபட்சம் தீய காரியங்களிலிருந்து விலகி வாழ முடியும்.

எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொன்டால் !
எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும்,எல்லா நிலைகளிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற அச்ச உணர்வு ஒருவருக்கு உருவானால்  அவர் முதலாளியின் அறிவுக்கு எட்டாது என்றெண்ணி வேலை செய்யும் நிருவனத்தில் தனது திறமைக்கேற்ப செய்யத் துணிய மாட்டார், நேர்மையாக பணியாற்றுவார், சொந்த நிருவனம் போல் கருதி நடந்து கொள்வார்.

மக்களில் அதிகமானோருக்கு விளங்கிக் கொள்ள முடியாது என்றுக் கருதி சீனாவிலிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து ஜப்பான், அமெரிக்கா என்ற ஸ்டிக்கர் ஒட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து மக்களை ஏமாற்ற துணிய மாட்டார், குறைந்த லாபமாக கிடைத்தாலும் உண்மையைப் பேசி விற்பனை செய்வார்.

அடுத்தவனின் (அப்பாவிகளின்) சொத்தை அபகரிக்க ஆசைப்பட மாட்டார், அடுத்தவனின் மனைவியை அனுபவிக்க ஆசைப்பட மாட்டார் தனக்கு உரிமையற்றவைகளிலிருந்து விலகி விடுவார்.

மக்களிடம் நற்குணத்துடன் நடந்து கொண்டால் !
  • தன்னைப் போன்ற பிற மனிதர்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற நற்சிந்தனை உருவானால்,அவரிடம் பொதுநலச் சிந்தனை மேலோங்கிவிடும்.
  • பொதுநலம் பேணும் உயர் சிந்தனை உருவாகி விட்டால் சுயநலம் செயலிழந்து விடும், சுயநலமே பெரும்பாலான தவறுகள் இழைப்பதற்கு காரணமாகிறது
  • பொதுமக்களிடம் நற்குணத்துடன் நடந்து நன்மதிப்பைப் பெற்றவர் தவறு செய்யத் துணிய மாட்டார்.
  • தனிமையில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவார், வெளியில் மக்களின் விமர்சனத்திற்கு வெட்குவார்,

கன்ட்ரோலை மீறி விடும் அன்றாட காரியங்கள்
அண்ணலாரின் அறவுரைகளின் படி அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டும், பொதுமக்களிடம் நற்குணத்துடனும் பழகிக் கொண்டும் ஒருப் பாவம் கூட செய்யாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் மக்களால் கூட கீழ்காணுமாறு சிறிய பாவங்கள் அவர்களுடைய கன்ட்ரோலை மீறி விடுவதை அன்றாட வாழ்;க்கையில் காண்கிறோம்.

உதாரணத்திற்கு
வாகனம் ஓட்டும் பொழுது ஒருவர் ஓவர்டேக் செய்து விட்டால் அல்லது நகரச் சொல்லி காதைக் கிழிக்கும் ஹாரன் கொடுத்து விட்டால் அதனால் கோபம் தலைக்கேறி கண்ணாடியைத் திறக்காமல் அவரை இன்ன வார்த்தைகள் என்றில்லாமல் திட்டிவிடுகிறோம், கண்ணாடியைத் திறக்காமல் திட்டுவதால் அதை அவர் செவியுறாமல் இருக்கலாம் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் செவியுறாமல் இருப்பானா ? நம்முடன் இருக்கும் மலக்குகள் அதை பதியாமல் விட்டு விடுவார்களா 

வீதியில் போகின்ற பெண்களை வீட்டுக்காரம்மா உடன் வராததால் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசிக்கச் சொல்லி ஷைத்தான் தூண்டுகிறான் வீட்டில் விட்டு வந்த வீட்டுக்காரம்மாவுக்கு இது தெரியாமல் போகலாம். எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் இதைப் பார்க்காமல் இருப்பானா ? நம்முடன் இருக்கும் மலக்குகள் இதைப் பதியாமல் விட்டு விடுவார்களா 

பணி புரியும் அலுவலகத்தின் நிர்வாக மேலாளரிடம் கோப்புகளை காண்பிக்கும் பொழுது அவர் எதாவது குறையை சுட்டிக்காட்டினால் அங்கு தலையை அசைத்து விட்டு வெளியில் வந்ததும் மனதுக்குள் அல்லது சக ஊழியரிடம் அவரை வசைப்பாடுகிறோம், மேலாளர் அதை செவியுறாமல் இருக்கலாம் ஆனால் எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற அல்லாஹ் செவியுறாமல் இருப்பானா?நம்முடன் இருக்கும் மலக்குகள் அதை பதியாமல் விட்டு விடுவார்களா 

வீட்டிற்குள் நுழைந்தால் வெளியில் நடந்த டென்ஷன்களை மனைவியின் தலையில் கொட்டித் தீர்க்கின்றோம்.

தொலைகாட்சியின் முன்பு அமர்ந்தால் நியூஸ் மட்டும் பார்க்காமல் எண்ணிலடங்கா சேனல்களில் புகுந்து கொண்டு எப்பொழுது அதிலிருந்து விடுபடுவோம் என்றே தெரியாத நிலை.

வீட்டில், அல்லது அலுவலகத்தில் இருக்கும் இன்டர்நெட்டில் புகுந்து விட்டு வெளியேறும் பொழுது கண்கள் கற்புடன் திரும்பபுவதற்கு உத்தரவாதமில்லாத நிலை.

இவ்வாறாக வீட்டை விட்டு புறப்பட்டு சொந்த அலுவல்களை முடித்துவிட்டு மீண்டும் வீட்டை வந்தடைந்து தொலைகாட்சி, மற்றும் இணையத்திற்குள் புகுந்து வெளியே வருவதற்குள் நம்முடைய கன்ட்ரோலை மீறுகின்ற எத்தனையோ சிற் சிறிய பாவகாரியங்கள் சொல்லி மாளாது.
 
என்ன தான் தீர்வு !
புள்ளிகள், கோடுகளாகவும், கோடுகள் ஓவியங்களாகவும் உறுப்பெறுவதுபோல் சாதாரணமாக நினைத்து விட்டு விடும் இந்த செயல்பாடுகளால் பதியப்படும் ஒவ்வொரு பாவங்களும் மலைபோல் ஆகி  நன்மைகளை முந்தி விடக்கூடாது என்பதால் தன்னை மீறிவிட்டப் பாவத்தைக் கழுவுவதற்கு அதற்கடுத்து விரைந்து நற்காரியமாற்ற வேண்டும்,

அன்றாடம் நம்மைக் கடந்து செல்லும் ஏனைய செயல்பாடுகளில் எது பாவகாரியம் என்று நம்மால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு கலாச்சார சீரழிவுகள் மலிந்து விட்டதால் சொந்த அலுவல்கள் போக எஞ்சிய நேரத்தை அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் நமக்கு ஏவிய அழைப்புப் பணியை மேற்கொள்வது, அதற்காக செலவு செய்வது, அதை செய்பவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் ஆலோசனைகள் மூலமாக உதவுவது,

  •  தர்ம காரியங்களில் ஈடுபடுவது,
  • நம்முடைய பராமரிப்பிற்கு கீழுள்ளவர்களை முறையாக கவனிப்பது,
  • நமக்கு கீழ்நிலையில் உள்ள பொதுமக்களின் மீது இறக்கம் கொண்டு பொதுநலப்பணிகளில் பங்கு வகிப்து.

போன்ற நற்காரியங்களில் அதிகம் ஈடுபட்டால் நன்மைகள் அதிகரிக்கும் தெரிந்து செய்யும் பாவங்களும், தெரியாமல் செய்யும் பாவங்களும் செயலிழக்கும். நன்மைகள் தீமைகளை அழித்து விடும். இது படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை. 11:114.

இறுதியாக இரண்டு செய்திகள்
தீய காரியத்திற்கு பாவம் ஒன்று, அதையும் அதற்கடுத்து செய்யும் நற்காரியத்தில் ஈட்டும் நன்மையைக் கொண்டு அழித்து விடலாம் என்கின்ற அல்லாஹ்வின் அருட்கொடையை தவறாக பயன்படுத்த ( தீயசெயலை தாமாக விரும்பி செய்து விட்டு அதற்கடுத்து நற்செயல் என்று திட்டமிட்டு தொடருவதற்கு) முயற்சிக்க கூடாது. சலுகையை சலுகையாக பயன்படுத்த வேண்டும், வரம்பு மீறக்கூடாது வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். …இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.2:178

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் தீமைக்கடுத்து ஒரு நன்மையை செய்யும்படி கட்டளைப் பிறப்பித்திருப்பதால் அதற்கு முன் அட்வான்ஸாக செய்து அனுப்பிய நன்மைகளில் ஒன்றை எடுத்து புதிய பாவத்தை இறைவன் அழித்துக் கொள்ளட்டும் என்றுக் கருதி வெறுமனே இருந்து விடாமல் தீமைக்கடுத்து விரைந்து நற்செயல் ஒன்றை செய்தேயாக வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே  செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்…2:285  

என்ற திருமறை வசனத்தை செயல்படுத்திய குர்ஆனிய சமுதாயாவோம்.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், நவம்பர் 15

நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்



وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُواْ الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُواْ يَأْتِ بِكُمُ اللّهُ جَمِيعًا إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே  நன்மைகளுக்கு  முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். அல்குர்ஆன்: 2.148

நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்

நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிருத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான்.

ஒருவர் தொழாதவறாக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும்.

தொழக் கூடியவராக இருப்பார் ஆனால் வைகரைத் (ஃபஜ்ரு) தொழுகையை தொழாதவராக இருப்பார் மற்ற நேரத் தொழுகைகளை தொழுது கொண்டு ஃபஜ்ரை தொழாமல் இருப்பது சரியல்ல நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும்.

இன்னாருக்கு இன்னத் தேவைக்காக இவ்வளவு கொடுத்து உதவிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்;ததுமே தாமதிக்காமல் கொடுத்து உதவிட வேண்டும்

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.

1- மறதியில் ஆழ்த்தும் வறுமை,
2- அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,
3- உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,
4- சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,
5- விரைந்து வரும் மரணம்,
6- தஜ்ஜாலின் வருகை,
7- இறுதி தீர்ப்பு நாள்,

என்று இதைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி

மேற்கானும் ஏழு நிலைகளை மனிதன் அடைந்து விட்டால் நற்செயல்கள் புரிவது கடினமாகி விடும். உதாரணத்திற்கு முதுமையும், நோயும் வந்து விட்டால் மரண பயமும், மறுமை சிந்தனையும் வரும் அப்பொழுது தனது மறுமை நிலையை சீர் செய்து கொள்வதற்காக தன்னிடத்தில் இருக்கும் செல்வத்தில் இன்ன ஆளுக்கு இன்ன தொகையை தர்மம் செய்து விடு, இன்ன நிலத்தை இன்ன பள்ளிவாசலுக்கு வக்ஃப் செய்து விடு என்று தன்னுடைய வாரிசுகளிடம் சொல்வார் ஆனால் அவைகள் நடக்காமல் போய் விடுவதற்கே அதிக வாய்ப்பு உண்டு. காரணம் அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கைக்கு சென்றதும் அவருடைய செல்வங்களில் இன்னவைகள் இன்னவருக்கென்று அவருடைய வாரிசுகளால் முன்கூட்டியேப் பிரிக்கப்பட்டிருக்கும் அதனால் அவர் நோய்வாய்ப்பட்டப் பின் தனது மறுமை நிலையை சீர் செய்து கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இரைக்கும் நீர் போன்றவைகளாகவே மாறும். ஆகவே ஒவ்வொருவரும் மேற்காணும் ஏழு நிலைகளை அடைவதற்கு முன்னரே தாமதிக்காமல் இயன்றவரை நற்செயல்கள் புரிந்திட முயற்சி செய்திட வேண்டும்.

இருள் நிறைந்த இரவின் பகுதிகள் போல அடுக்கடுக்காக வரும் குழப்பங்களுக்கு முன்பாக நற்செயல்களைக் கொண்டு முந்திக் கொள்வீர்களாக! (அந்நேரத்தில்) ஒரு மனிதன் காலையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பான் மாலையில் இறை நிராகரிப்பவனாக மாறிவிடுவான், அல்லது மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பான். காலையில் இறை நிராகரிப்பாளனாக மாறி விடுவான். உலகின் அற்பமான பொருளுக்கு மார்க்கத்தை விற்று விடுவான். என்று இதைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: முஸ்லிம்

இன்று நாம் பார்க்கின்றோம். ஒரு பயானை (மார்க்க சொற்பொழிவை) கேட்கும்பொழுது உள்ளம் இறைநம்பிக்கையில் ஊறிப்பேயிருக்கும் மறுமையே உறுதி என்றும் நற்செயல்கள் புரிவதே நன்மையை ஈட்டித்தரும் என்றும் நம்பி இருப்போம். அடுத்து சிறிது நேரத்திலெல்லாம் வீதியோரம் நடந்து சென்று கொண்டிருக்கையில் பலான சினிமாப் படப் போஸ்டர் ஒன்றைப் பார்த்து விட்டால் உள்ளம் ஊசலாடத் தொடங்கும் உதாரணத்திற்காகவே பலான போஸ்டரைக் குறிப்பிடுகிறோம் அதையும் தாண்டி உள்ளத்தை தடுமாறச் செய்யும் எண்ணற்ற நிகழ்வுகள் கண்முன்னே நிகழும்பொழுதும், தடுமாறி அதில் வீழும் நிலை ஏற்படும் பொழுதும் அந்தந்த நிலைதடுமாற்றத்திற்குத் தகுந்தாற்போல் இறைநம்பிக்கையை இழந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதுப்போன்றதொரு தீமையால் மூழ்கும் காலம் வருவதற்கு முன்னதாகவே நற்செயல்களை முற்படுத்தி இறைநம்பிக்கயை வலுப்படுத்திக் கொண்டு மறுமைiயில் வெற்றிப்பெற முயற்சிக்க வேண்டும்.

காலத்தை குறைக் கூறி நாமும் தீமையில் மூழ்கலாமா ?
தீமைகள் நிறைந்த காலத்தில் வாழ்ந்து வருவதால் அதில் நற்செயல்கள் புரிவது கடினம் என்று காலத்தை குறைக் கூறி நாமும் தீமையில் மூழ்கிட முடியாது. நிர்பந்தம் தவிற வேறு எந்த சாக்குப் போக்கும் தீமை செய்வதற்கு ஆகுமானதல்ல நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் எவ்வளவோ மேலானது இனிவரும் காலமே இதை விட மோசமானதாக இருக்கும் என்று கருதிக் கொண்டு நற்செயலை முற்படுத்த வேண்டும் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு கூறித் தந்துள்ளார்கள்.

நாங்கள் நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் (இராக்கின் ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூசுப் எங்களுக்கு செய்யும் கொடுமைகளைப் பற்றி முறையிட்டோம். அதற்கு அனஸ்(ரலி) அவர்கள் பொறுமை கொள்வீர்களாக! ஏனெனில் எந்தக் காலம் வந்தாலும் அதற்கு பிந்திய காலம் அதனைவிட தீங்கானதாகவே இருக்கும். நீங்கள் உங்கள் இரட்சகனை சந்திக்கும் வரை (கியாமத் நாள்வரை) இவ்வாறே இருக்கும் எனக்கூறிவிட்டு, இதனை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவி மடுத்துள்ளேன் என்று அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்ததாக ஜூபைர் பின் அதீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி

நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்தக் காலம் எவ்வளவோ மேலானது இனிவரும் காலமே இதைவிட மோசமானதாக இருக்கும் என்றுக்கருதி ஒவ்வொரு ஜெனரேசனும் நியாயத் தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கைக் கொண்டு காலதாமதம் செய்யாமல் இயன்றவரை நல்லறம் செய்திடல் வேண்டும். காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஷைத்தானுக்கு அது சாதகமாகவே அமைந்து விடும்.

நன்றே செய்க! அதை இன்றே செய்க !  என்றும் தமிழில் கூறுவதுண்டு.
நற்செயல் புரிய வேண்டும் என்ற சிந்தனை மனதில் தோன்றியதும் தாமதிக்காமல் அவற்றை செய்து முடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கிட வேண்டும் என்பதையே மேற்காணும் திருமறைக் குர்ஆனும், நபிமொழியும், தமிழ் பழமொழியும் உணர்த்துகிறது.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்